பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்?
இதற்கு எப்படி ஜடாரி என்ற பெயர் வந்தது? அதன் வரலாறு என்ன? யாரால் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது? போன்ற கேள்விகளுக்கு இப்பதிவில் பதில் காண்போம் வாருங்கள்.
பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவர் நம்மாழ்வார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் வைணவத்தில் நாட்டம் கொண்டவர்.
பெருமாள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது இயற்பெயர் மாறன் என்பதாகும். வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
மாறன் என்று பெயர் சூட்டியதன் காரணம் ஒவ்வொரு ஜனனத்தின் போதும் முற்பிறவி நினைவுகள் அழிந்து புதிய ஆத்மாவாக பிறப்பெடுப்பது தான் உலக நியதி. அப்படி பழைய நினைவுகள் அழியும் போது ஒருவித ஜட வாயுவானது சிசு பிண்டத்தில் புகும்.
அந்த ஜட வாயுவை அழித்து முற்பிறவி நினைவுகளுடன் அப்படியே உலக நியதிக்கு மாறாக பிறந்ததால் மாறன் என்று போற்றப்பட்டார்.
பிறந்ததும் அழவும் இல்லையாம். இதன் காரணமாக தான் ஜடாரி என்ற பெயரும், சடகோபன் என்ற பெயரும் இவருக்கு வந்தது.
ரிக் யஜுர், சாம, அதர்வண என்கிற நான்கு வேதங்களையும் நம் இனிய தமிழ் மொழியில் பாசுரங்களாக வடிவமைத்தவர் நம்மாழ்வார். இதனால் இவருக்கு ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.
திருக்குருகூர் என்ற இடத்தில் கோவிலில் உள்ள ஒரு புளிய மரத்தடியில் ஏறத்தாழ பதினாறு வருடங்கள் அசைவின்றி தவக்கோலம் பூண்டார். இவரின் பக்திக்கு இணங்கி திருமாளே தம் திருவடியில் சரணாகதி கொடுத்தார் என்பது வரலாறு.
ஜடாரியானது மன்னனின் தலையில் இருக்கும் கிரீடம் போல் இருக்கும். அதன் மேல் பகுதியில் உச்சியில் பெருமாளின் மலர் பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் .
நாம் தேடி செல்லாவிட்டாலும் நம்மை தேடி அந்த பாதங்கள் வந்து ஆசீர்வதித்து செல்லும். நம்மாழ்வாரே இதை செய்விப்பதாக ஒரு கூற்று உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நம்மாழ்வாரின் கோவிலில் வைக்கும் இதே போன்ற கிரீடத்திற்கு ராமானுஜம் என்று பெயர். இதில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இன்றைய கலியுகத்திலும் நமக்கு பெருமாளின் ஆசீர்வாதம் கிட்டுவதற்கு ஜடாரி என்னும் திருமாலின் பாதம் பொறித்த அழகிய கிரீடம் நம் தலையில் வைத்து எடுக்கிறார்கள்.
நம்மாழ்வாரே இறைவனின் திருவடிகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதாக ஐதீகம். இதனால் ஆணவம் அழிந்து பக்தி மேம்படும். இறையருள் முழுமையாக நமக்கு கிட்டும்.