“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என நமது தமிழ் மக்களின் கொள்கையாகும். மேல்கூறப்பட்ட வரிகளில் நமது நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களின் இறைவன் சிவ பெருமான் என உறுதியாகிறது.
அந்த சிவ பெருமானுக்கு தமிழ் நாட்டில் உள்ள அளவுக்கு பிற பகுதிகளில் கோவில்கள் இருக்குமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. தமிழர்களின் தொன்மைக்கு சாட்சியாகவும் இன்றும் உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரம் மதுரை மாநகரம்.
அந்த மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோவில் குறித்த சிறப்பு தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருத்தல வரலாறு :
5000 வருடங்களுக்கு மேல் இன்றும் மக்கள் வாழும் உலகின் ஒரு சில நகரங்களில் மதுரை மாநகரும் ஒன்று.மதுரை நகருக்கு “ஆலவாய், நான்மாடக்கூடல்” போன்ற பல பெயர்கள் இருக்கின்றன.
இந்த மிகச்சிறந்த பெருமையை தருவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலாகும். இக்கோவிலின் இறைவனான சிவ பெருமான் “சொக்கநாதர், சோமசுந்தரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். அம்பாள் மீனாட்சி, அங்கயற்கன்னி என அழைக்கப்படுகிறாள்.
பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இக்கோவில். கடம்ப மரங்கள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் காணப்பட்டன. இதனால் மதுரைக்கு கடம்பவனம் என்கிற பெயரும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரமே இருக்கிறது.
இக்கோவில் இருக்கும் மதுரை மாநகரம் முற்காலம் முதலே பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக இருந்து வருகிறது. மலையத்துவஜ பாண்டிய மன்னனுக்கு, பார்வதி தேவியே மகளாக பிறந்தாள்.
அக்குழந்தைக்கு தடாதகை என பெயர்சூட்டி வளர்த்து வந்தார் மலையத்துவஜ பாண்டியன். தடாதகை மங்கையாக வளரும் காலத்தில் போர்கலைகளைக் கற்றுத்தேர்ந்தாள்.
கயிலாயத்தில் இருக்கும் சிவபெருமானிடம் போர்புரிய சென்ற போது அவரின் மீது பிரியம் ஏற்பட்டது. அவரையே தனது கணவனாக ஏற்க விருப்பம் கொண்டாள்.
சிவன் பார்வதி திருகல்யாணத்தை காண தேவர்கள், சித்தர்கள் அனைவரும் கயிலையில் திரண்டனர். பிரம்மதேவன் முன்னின்று இத்திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
பாண்டிய மன்னரின் மருமகன் ஆனதால் சிவபெருமானுக்கு சோமசுந்தர பாண்டியன் என்று பெயர் . மீன் கொடியை கொண்ட பாண்டிய மன்னர் பரம்பரையின் அரசியாக இருப்பதால் அன்னை, மீனாட்சி என அழைக்கப்படுகிறாள்.
திருக்கோவில் அமைப்பு :
வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட இக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்திய கோவில்களில் மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு தேவியான மீனாட்சியம்மனுக்கே முதலில் பூஜைகள் செய்யப்படுகின்றன.
சிவ பெருமான் இந்த மதுரை நகரில் 64 திருவிளையாடல்களை புரிந்துள்ளார். சிவபெருமானின் ஐந்து சபைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளி சபையாக இருக்கிறது.
இத்தலத்தில் சிவபெருமான் நடராஜராக காட்சியளித்தார்.பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கால் மாற்றி சந்தியா தாண்டவம் எனும் நடனத்தை ஆடிக்காண்பித்தார்.
பொற்றாமரை குளம் :
இக்கோவிலில் இருக்கும் குளத்திற்கு பெயர் பொற்றாமரை குளம். சிவ பெருமான் தனது சூலாயுததால் தரையில் கீறி இக்குளத்தை உண்டாக்கியதாக தல வரலாறு கூறுகிறது.
திருத்தல சிறப்பு :
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் பராமரிக்கப்பட்டு வந்தது. திருமலை நாயக்க மன்னர் காலத்தில் இக்கோவிலின் நான்கு கோபுரங்களும் கட்டப்பட்டன.
இந்த திருமலை நாயக்க மன்னர் தான் மீனாட்சி அம்மன் கோவில் சார்பாக கொண்டாடப்படும் “சித்திரை திருநாள்” விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் படி செய்தார்.