சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளது. அக்கோவிலில் அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் எட்டும் சிற்ப நூல் விதிப்படி நிறுவப்பட்டிருக்கிறது.
இக்கோவிலின் தரைத்தளத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமியின் பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. கிழக்கே திருமுக மண்டலம்.
அப்படியே பிரகாரத்தில் சுற்றினால் தென் பகுதியில் ஸ்ரீ ஆதிலட்சுமி, மேற்கில் ஸ்ரீ தானிய லட்சுமி, வடக்கில் ஸ்ரீ தைரியலட்சுமி, மீண்டும் ‘ஸ்ரீ மகாலட்சுமியின்’ பிரதான சன்னதி உள்ளது.
பின்பு இரண்டாவது தளத்திற்கு ஏறினால் முதலில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ கஜலட்சுமியை தரிசனம் செய்யலாம்.
அதன்பிறகு பிரகாரத்தில் சுற்றினால் தென்பகுதியில் ஸ்ரீ சந்தானலட்சுமி, மேற்கில் ஸ்ரீவிஜயலட்சுமி, வடக்கில் ஸ்ரீ வித்யா லட்சுமிகளையும் வழிபாடு செய்யலாம்.
அதன்பிறகு ‘ஸ்ரீ கஜலட்சுமி’ சன்னதியிலிருந்து மூன்றாவது தளத்திற்கு மேலேறி சென்றால், பிரதான நிலையில் ஸ்ரீ தனலட்சுமி அருள் காட்சி தருவாள். இவ்வாறாக அஷ்டலட்சுமிகளையும், பிரதான சன்னதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி மூர்த்தங்களையும் தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
ஆலய அமைப்பு
இந்த அஷ்ட லட்சுமி ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகளுடன் கூடிய சிறு சிறு கோவில்கள் உள்ளன. அவை தரைத்தளத்தில் நான்கும், இரண்டாம் தளத்தில் நான்கும், மூன்றாவது தளத்தில் ஒன்றுமாக நிறுவப்பட்டுள்ளன.
இக்கோவிலின் முதல் நிலைக் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகளின் எட்டு வடிவங்களும் அதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறாகவே இரண்டாம் நிலையில் ‘தென்கிழக்கு’ மூலையில் ஸ்ரீ லட்சுமி கல்யாணத் திருக்கோலமும், ‘தென்மேற்கு’ மூலையில் ஸ்ரீவைகுண்டக் காட்சியை காணலாம்.
வடமேற்கு மூலையில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வாசாரியார் போன்ற மகா ஞானிகளின் திருவுருவங்கள் உள்ளன.
வடகிழக்கில் ‘தேவாசுரர்கள் அமிர்தம் பெற திருப்பாற் கடலையும் கடையும் எழிற் காட்சியும்’ அதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு நம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்கின்றன.
மூன்றாவது நிலையில் ஒரு புறம் ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின்’ தசாவதாரக் கோலங்களும், ஒரு புறம் சைவ சம்ப்ரதாயத்தின்படி ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தவம் ஓதும் பிம்பத்தையும், ஒருபுறம் வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தூப்புல் ஸ்ரீநிகமாந்த மகா தேசிகரின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
பிரதான கோவிலின் முன்புறமாக இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி என இரண்டு பொக்கிஷங்களுக்கும் இரண்டு கோவில்கள் உள்ளன.
ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார்.
ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர், இந்திரர்,சனகர், சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர்.
திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம்.
அடுத்தாற்போல் லட்சுமி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலட்சுமி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் உள்ளன.
மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலட்சுமி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் சந்நிதி காணப்படுகிறது.
தனலட்சுமி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவம். தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும் உள்ளன. பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் காட்சித் தருகின்றனர்.
கர்பகிரஹம்
பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள்.
உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர் என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளனர்.
இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முதல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம்.
அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாது.
ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.