திருப்பத்தூர் அருகே மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் , குனிச்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர். இவர் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருப்பத்தூரை அடுத்த பஞ்சணம் பட்டி பகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் கிருஷ்ணனுடைய மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

கணவன் மனைவி தற்கொலை
பின்னர் குடும்பத்தில் அனைவரும் தூங்கிய பின்பு விடியற் காலை 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பால சோமேஸ்வரர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் கிணற்றின் வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் கிணற்றின் உள்ளே எட்டிப்பார்த்தபோது ஆர்த்தியின் உடல் இருப்பதைக்கண்டு அவருடைய கணவர் சுதகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பதறிப்போன சுதாகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து ஆர்த்தியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் சுதாகரும் ஒரு மணி நேரத்தில் அருகில் உள்ள தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுதாகர் மற்றும் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

