சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
தல வரலாறு
அந்த காலத்தில் மதுரேசர் என்பவருடைய வாழைத் தோட்டமாக இருந்த பகுதியே, இன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலகமாகவும், கோட்டை என்ற பெயரிலும் விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனியர் தங்கள் வியாபாரத்தை வளர்க்க நினைத்து மதுரேசருடைய வாழைத் தோட்டத்தை விலை கொடுத்து வாங்கினர்.
1758-ம் ஆண்டில் கோட்டையை வலிமை மிக்கதாகக் கட்டி முடித்தனர். ராணுவத்தைப் பெருக்க விரிவான நிலம் தேவைப்பட்டதால், தற்போதுள்ள உயர்நீதி மன்றத்தின் தென்புறத்தில் இருந்த சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் ஆகிய இரு இரட்டைக் கோவிலை அகற்றினர்.
1762-ம் ஆண்டு கோவிலை கட்டித் தருவதாக ஆங்கிலேயர்கள் உறுதியளித்தனர். ஆனால் அதை மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்பவர் மறுத்தார்.
தனது சொந்த செலவிலேயே இரண்டு ஆலயங்களையும் வைணவ மற்றும் சைவ ஒற்றுமையை பறை சாற்றும் வண்ணம் தற்போது உள்ள இடத்தில் கட்டி முடித்தார்.
தற்காலம் வரை இந்தக் கோவில் அவருடைய சந்ததியினரது மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. இத்திருக்கோவில் நுழைவு வாசலில் அழகான மண்டபம் உள்ளது.
ஆலய அமைப்பு
வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார். தன்னை வணங்குபவருக்கு மனத்தூய்மையும், மங்களத்தையும் தருவதோடு விக்கினங்கள் வராமலும் தடுக்கிறார்.
இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். அடுத்ததாக இறைவனாய் காட்சி தருகிறார்.
மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள்.
பேரெழில் பொருந்திய அன்னையின் திருக்கோலம் காண்போர் உள்ளத்தை கவரும் விதமாக உள்ளது.
வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர்.
இவர் அருகில் சிவனார் லிங்க வடிவில் அருள்புரிகிறார். இவர் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்களை நமக்குத் தந்தருளியுள்ளார்.
வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில் ஆறுமுகப் பெருமான் அருள்மிகு சண்முகராய் தெற்கு நோக்கிய படி அருள் புரி கிறார். இவருக்கு அருகில் பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.
உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது.
இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.