‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது, பாம்பு படமெடுத்து நிற்கும் நிலை ஆகும்.
இந்த ஆசனத்தைப் பார்த்தால் சீரண உறுப்புக்கு கீழ்ப்பகுதி வரை தரையில் இருக்கும். அதன் மேல் உடல் உயர்ந்து இருக்கும்.
இந்த நிலையில் நிற்கும்போது முதுகுத்தண்டு வளைந்து அதன் வால் பகுதி வரை இழுக்கப்படுவதால், முதுகுத்தண்டு பலமாகிறது. அதனால் நரம்புகள் உறுதியாகின்றன. முதுகு வளைவதோடு, முன் பக்கம் வயிற்றுக்குக் கீழ் வரை இழுக்கப்படுகிறது.
அதனால் வயிறும், குடல் இயக்கமும் சீராகின்றன. பிறப்புறுப்பு பிரச்சினை சரியாகிறது. சிறுநீர்ப்பையின் இயக்கம் சீராகிறது.
முக்கியமாக இந்த நிலையில் நிற்கும்போதுதான் பாம்பிற்குத் தாக்குவதற்கான பலம் கிடைக்கிறது. அப்படி ஒரு பலத்தை உடலுக்கு இவ்வாசனம் தருகிறது.
மேலும் ‘புஜம்’ என்றால் ‘தோள்’ என்பதே பொதுவான பொருள். இவ்வாசனத்தில் மேலுடலை இரு கைகளால் தாங்கி நிற்பதால் மணிக்கட்டு, முழங்கை, தோள் பகுதிகள் பலமடைகின்றன. கழுத்தும் பலமடைகிறது.
புஜங்காசனத்தின் மேலும் சில பலன்கள் :
மேற்கூறிய பலன்கள் மட்டுமல்லாமல், புஜங்காசனம் செய்வதால்,
நோய் எதிர்ப்புத் திறன் வளர்கிறது.
நுரையீரலைப் பலப்படுத்தி ஆஸ்துமா போன்ற கோளாறுகளைத் தவிர்க்க உதவுகிறது.
கழுத்து மற்றும் தோள்களின் வலியைப் போக்குகிறது.
வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைப்பதால் தொப்பையைக் கரைக்கும் ஆசனங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மாதவிடாய் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
உடல் சோர்வைப் போக்குகிறது
செய்முறை :
விரிப்பில் குப்புறப் படுக்கவும். உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும்.
மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பு வரை உடலை உயர்த்தவும். இப்பொழுது, உங்கள் கைகள் வளையாமல் நேராக இருக்கும்.
தோள்களைப் பின்தள்ளி மார்பை விரிக்கவும்.
நேராகப் பார்க்கவும் அல்லது முகத்தை மேல் நோக்கி உயர்த்தவும்.
20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் வைத்து பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு :
உயர் இரத்த அழுத்தம், குடலிறக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் புஜங்காசனத்தைத் தவிர்ப்பது நல்லது. மணிக்கட்டில் தீவிர வலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.