வணிகம்

ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்த ஒப்பற்ற நிறுவனம்- ஏசியன் பெயிண்ட்ஸ் – ஒரு சிறு பார்வை

1942 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் பெயிண்ட்டுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பெரிய பெயிண்ட் நிறுவனமாக Shalimar paints மற்றும் சில வெளிநாட்டு பெயிண்ட் நிறுவனங்களின் பெயிண்டுகள் தான் சந்தைகளில் கிடைத்தன.

இந்தியா விடுதலை போராட்டத்தில் கடுமையாக பங்கேற்று இருந்த அந்த நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தனது போராட்டத்தை வலுப்படுத்திக்கொண்டு இருந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 26 வயதேயான சம்பக்லால் சோக்ஸி அவரது மூன்று நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறிய அறையில் பெயிண்ட் உற்பத்தி செய்திடும் நிறுவனத்தை துவங்கினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஒரு சிறிய அறையில் பெயிண்ட் தயாரிக்க துவங்கியவர்கள் தங்களது பெயிண்ட் நிறுவனத்திற்கு ‘ஏசியன் பெயிண்ட்ஸ்’ என்ற பெயரை சூட்டினார்கள்.

ஏற்கனவே மார்க்கெட்டில் குறைவான போட்டியாளர்களே இருந்த சூழ்நிலையில் இவர்களின் கடும் முயற்சியால் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டியது.

ஏற்கனவே இருந்த நிறுவனங்கள் மிகப்பெரிய நகரங்களை குறிவைத்து இயங்கிக்கொண்டிருக்க இவர்களோ சாதாரண கிராமங்களை நோக்கி தங்களது வணிகத்தை துவங்கியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆமாம், 1952 இல் நிறுவனத்தின் நிகர லாபம் 23 கோடி.

அரை நூற்றாண்டாக முன்னிலை

1967 இல் இந்தியாவின் முதன்மையான பெயிண்ட் உற்பத்தி செய்திடும் நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்தியது ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints]. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாதனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நிறுவனம்.

ஏற்கனவே கூறியது போல ஏசியன் பெயிண்ட்ஸ் தனது விற்பனை நிலையங்களை நகரத்தை மையப்படுத்தி இல்லாமல் பிற நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தியாக இருந்தது.

இதன் விளைவாக, கிராமப்புறங்களில் ஏசியன் பெயிண்ட்ஸ் நல்ல விற்பனையை அடைந்தது. அதன் காரணமாக, நகரத்திலும் மார்க்கெட்டை பிடித்தது. விற்பனையாளர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் ஐ கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

மார்க்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஒரு பெயிண்ட் நிறுவனத்தின் பெயரைக்கூறுங்கள் என எவரேனும் கேட்டால் ஏசியன் பெயிண்ட்ஸ் என்று சொல்லும் அளவுக்கு நிறுவனத்தின் பிராண்ட் ஐ மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது இந்நிறுவனம் .

தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் எப்போதும் முன்னோடியாக இருந்துள்ளது. 1970 இல் இந்நிறுவனம் சுமார் 7 கோடிக்கு கணினிகளை வாங்கியது. அப்போது சில நிறுவனங்கள் கணினியை பயன்படுத்தின. ஆனால் அவை வரவு செலவுகளை கணக்கிடவே பயன்படுத்தின.

ஆனால் ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நிறுவனம் எங்கே பெயிண்ட் தேவை இருக்கிறது, விற்பனை எங்கெல்லாம் எப்படி நடைபெறுகிறது என்பதை data analytics மூலமாக கண்டறிந்து விற்பனையை ஊக்குவித்தது.

உலகளாவிய வணிகம்

இன்றைய நிலவரப்படி, ஏசியன் பெயிண்ட்ஸ் குழுமம் உலகம் முழுவதும் 15 நாடுகளில் இயங்குகிறது. இது  Asian Paints,  Asian Paints Berger,  SCIB Paints, Apco Coatings,  Taubmans,  Causeway Paints மற்றும் Kadisco ஆகிய எட்டு பிராண்டுகள் மூலம் ஆசியா, மத்திய கிழக்கு, தென் பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு பிராந்தியங்களில் இயங்குகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதும் சந்தையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஆராய்ச்சிகளில் [research] முதலீடு செய்து வருகிறது. ஆகவே தான் ஒவ்வொரு முறையும் நாம் மாறுபட்ட தொழில்நுட்பத்தை ஏசியன் பெயிண்ட்ஸ் அறிமுகப்படுத்துவதை பார்க்க முடிகிறது.

உலகம் முழுமைக்கும் 26 உற்பத்தி நிலையங்களை கொண்டிருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம்.  65 க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 1,50,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களை கொண்டிருக்கிறது.

தனது பிராண்ட் பெயரை மார்க்கெட்டில் தக்கவைக்க விளம்பரத்திலும் முதலீடு செய்து வருகிறது ஏசியன் பெயிண்ட்ஸ். இப்போதும் கூட விதவிதமான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரங்களை நம்மால் காண முடிகிறது.

குறிப்பாக ஏசியன் பெயிண்ட்ஸ் என்ற தாய் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதோடு சக பிராண்டுகளான அல்டிமா, ராயல் போன்றவற்றையும் பிரபல்யப்படுத்தி வருகிறது.

வெறுமனே பெயிண்ட் என்றில்லாமல் டிசைனோடு சுவரை அழகுபடுத்துவதிலும் ஏசியன் பெயிண்ட்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர் எந்த நிறம் வேண்டுமென சொல்கிறாரோ அந்த நிறத்தை துல்லியமாக தயார் செய்திடும் முறையையும் ஏசியன் பெயிண்ட்ஸ் கையாள்கிறது.

வெள்ளை நிற பெயிண்டில் குறிப்பிட்ட நிற மாதிரிகளை வெவ்வேறான அளவுகளில் கலக்கும் போது புதுமையான நிறங்களை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது ஏசியன் பெயிண்ட்ஸ்.

தொடர்ச்சியாக நல்ல பொருளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல், புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், விளம்பரங்களின் வாயிலாக பிராண்ட் மதிப்பை உயர்த்துதல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல், ஆராய்ச்சிகளில் முதலீடு செய்தல்.

இது போன்ற காரணங்களால் இந்தியாவின் நம்பர் 1 பெயிண்ட் கம்பெனி என்ற சாதனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ்.

Related posts