எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதற்கு எதிராக தீவிரமான சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி உத்தரவின்பேரில், எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் ஜெபஸ்டின் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் காஞ்சிபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில் பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்து, கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை 7-ல் வந்து நின்றது. அப்போது பயணிகளில் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது, எந்த ஒரு போதை பொருட்களும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் சோதனை செய்த போது, அங்கு யாரும் உரிமை கூறாத சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த சூட்கேசை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது, அதில் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட 10 பொட்டலங்களில், சுமார் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பையுடன் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு வந்த போலீசார், கஞ்சா மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களை மேல் நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் போதை பொருள் புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். அதனடிப்படையில், போதை பொருள் தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், ஆந்திராவில் இருந்து 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வாரத்தில் மட்டும் சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையால் ரூ.11 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

