நகைக்காக தோழியை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (77). இவர் தனது கணவர் மற்றும் ஒரு மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டியை அவரது மற்றொரு மகனான நமச்சிவாயம் அடிக்கடி வீட்டிற்கு சென்று கவனித்து வந்தார்.
இந்நிலையில், நமச்சிவாயம் கடந்த மாதம் 20 ஆம் தேதி தாயை பார்க்க சென்ற போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விசாலாட்சியை கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரியப்படுத்தினர்.
மேலும் மூதாட்டி விசாலாட்சி அணிந்திருந்த சுமார் எட்டு பவுன் தங்க நகைகள் மாயமானதும் தெரிய வந்தது. இதனை அடுத்து நமச்சிவாயம் கொடுத்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் இறப்பு குறித்து விசாரணை செய்து வந்தனர். சந்தேகம் மரணத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். நகைக்காக கொலை செய்வோர் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தும், அவர்களை விசாரித்தும் வந்தனர்.
மேலும், சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இருப்பினும் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்து வந்தது. இந்நிலையில், அதே பகுதியில் விசாலாட்சி வீட்டின் அருகே வசித்து வந்த, அவரது தோழியான 75 வயது சரோஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மறைந்த உதவி காவல் ஆய்வாளரின் மனைவியான சரோஜா மற்றும் விசாலாட்சி ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், மூதாட்டி சரோஜா விசாலாட்சி அணிந்திருந்த நகைக்காக அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து விசாரணை முடிவில், கொலை செய்ததாக சரோஜா தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தள்ளாடும் வயதிலும் நகைக்காக தனது தோழியையே மூதாட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

