கடன் பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு எடுத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம், மாடம்பாக்கம், வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஆசிப். இவரது மனைவி ஷாம்சியா (வயது 26). இவர்களுக்கு ஆசிபா (வயது 10), அப்சர் (வயது 5) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆசிப் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஆசிப் இந்த முடிவு எடுத்ததாக தெரிய வந்தது.
இதையடுத்து தனது இரண்டு குழுந்தைகளுடன் ஷாம்சியா, அதே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வருமானம் இல்லாத நிலையில் ஷாம்சியா, மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். ஆசிபா 5- ஆம் வகுப்பும், அப்சர் 1- ஆம் வகுப்பும் பயின்று வந்தனர்.
வாங்கிய கடனை பல மாதங்களாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்த ஷாம்சியா கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த சூழலில் தனது குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்கெட் உள்ளிட்டத் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர், மாடம்பாக்கம் அருகே உள்ள விவசாய கிணற்றில் குழந்தைகளுடன் குதித்து விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த படப்பை தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மணிமங்கலம் காவல் துறையினர், நீண்ட நேரம் போராடி மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றநர். அப்போது ஷாம்சியா வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், “அதிக கடன் தொல்லை இருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சடலங்களைப் பார்த்து அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கதறி அழுதனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு எடுத்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளளது.

