ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியில் ஏரியில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட், டிவிஎஸ் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (13), நித்தீஷ் (14), மேலும் மற்றொரு நித்தீஷ் (13) ஆகிய மூன்று சிறுவர்கள், வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் மணியம்பட்டு பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்ற சிறுவர்கள், எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது, மூவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏரிக்குள் இறங்கி, மூன்று சிறுவர்களையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சிறுவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் கூறுகையில், “மூன்று சிறுவர்களும் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கரைக்கு சென்றபோது தவறி நீரில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும், உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்பு சம்பவத்தின் முழு விவரங்களும் தெளிவாக தெரியவரும். பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியாக ஆபத்தான இடங்களுக்கு அனுப்பாமல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அருகே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்” என்று அறிவுறுத்தினர்.

