விஜய் மல்லையா கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு பிரிட்டன் நாட்டிற்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதனையடுத்து விஜய் மல்லையா கடனை திருப்பி தரும் வரை அவர் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை மீறி விஜய் மல்லையா சுமார் 317 கோடி பண பரிவர்த்தனை செய்ததாக கூறி பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சிறை தண்டனை
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் மல்லையா கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவரின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தை அவமதிப்பிற்காக விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

