வஜ்ஜிரம் என்றால் மரத்தின் நடுப்பகுதி (core of the tree). மரத்தை வெட்டும்போது மரத்தின் நடுப்பகுதியை வெட்டுவதுதான் மிகவும் கடினம். ஒரு மரத்தின் முழு பரிமாணமும் அடங்கியிருப்பது அங்குதான்.
மரத்துக்கு நடுப்பகுதி போலவே மனித மரத்துக்கு வயிறும் அதையொட்டி இருக்கும் மண்ணீரலும், சிறுகுடலும், பெருங்குடலும் தான் நடுப்பகுதி. இந்த நடுப்பகுதியை எவர் ஆரோக்கியமாக வைத்திருக்கிறாரோ அவரது உடலும் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
ஏனெனில், உடலின் விளைநிலம் இப்பகுதிதான். உணவு உண்டு செரித்து சத்து பிரித்து இரத்தத்துக்கு கொடுத்து கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்து திடகழிவை தனியாக பிரித்து வெளியேற்றுவது வரை இந்த நடுப்பகுதியில் தான் நடக்கிறது.

இதன் வெற்றிகரமான செயல்பாடுதான் மற்ற உறுப்புகளின் வெற்றிகரமான இயக்கமாக இருக்கிறது. அதனால்தான் இந்த நடுப்பகுதி உடலின் விளைநிலம் என்கிறோம்.
உடம்பின் இந்த விளைநிலத்தை உறுதியாக்குவதுதான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வஜ்ஜிராசனம். அதனால்தான் உணவு உண்ட பின்னும்கூட இந்த ஆசனத்தை செய்யலாம். வஜ்ஜிராசனத்தையும் சவாசனத்தையும் தவிர மற்ற ஆசனங்களை உண்டபின் செய்யக் கூடாது என்கிறார்கள்.
உணவு உண்டபின் இந்த ஆசனத்தை செய்தால் வயிறு இளகி வாயுத் தொல்லை நீங்கி ஜீரணம் முழுமையாக நடைபெறும். உடலின் நடுப்பகுதி இயக்கத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் உடலை உறுதியாக்க சிறந்த ஆசனம் இந்த வஜ்ஜிராசனம்.
வஜ்ஜிராசனத்தின் மேலும் சில பலன்கள் :
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது; வயிற்றுப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால், வயிற்று உள் உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. மேலும்,
வயிற்றெரிச்சல் (acidity), வயிற்று புண் (ulcer) ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
மலச்சிக்கலை போக்குகிறது.
தொடை தொடங்கி பாதம் வரை நீட்சியடைய வைப்பதால் (stretch) கால்கள் பலம் பெறுவதோடு நெகிழ்வுத்தன்மையோடு விளங்குகிறது.
சையாடிக் பிரச்சினையை போக்க உதவுகிறது.

உட்காரும், நிற்கும் நிலையை (posture) சீராக்குகிறது.
மனதை ஒருமுகப்படுத்த உதவுவதால் தியானம் செய்வதற்கும் மூச்சு பயிற்சி செய்வதற்கும் ஏற்ற ஆசனமாகிறது.
செய்முறை :
விரிப்பில் முட்டி போட்டு அமரவும்.
தொடைகள் இரண்டையும் அருகருகே இடைவெளி இல்லாமல் வைக்கவும்.
கால் கட்டை விரல்களை ஒன்றுடன் ஒன்று படுமாறு வைத்து குதிகால்களை பிரிக்கவும்.
இப்போது, உங்கள் பாதங்களை பார்க்க ஆங்கில எழுத்து ‘v’ போல இருக்கும்.
குதிகால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் அமரவும்.

உங்கள் உள்ளங்கைகளை கால் முட்டியில் வைக்கவும் அல்லது கைகளை சின்முத்திரையில் வைத்து கால் முட்டியில் வைக்கவும்.
ஆரம்ப நாட்களில் 20 முதல் 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகப்படுத்தி மூச்சுப் பயிற்சி அல்லது தியானம் செய்து முடிக்கும் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறிப்பு :
குதிகால்களுக்கு நடுவில் அமர முடியாதவர்கள், எதாவது விரிப்பை சுருட்டி பாதங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து பழகவும்.
கால் மற்றும் கால் மூட்டுகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் குடலிறக்கம் உள்ளவர்கள் வஜ்ஜிராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
இந்த ஆசனம் அல்சர் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்றாலும், அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் யோகா நிபுணரின் நேரடி பார்வையில் இந்த ஆசனத்தை பழகுவது நல்லது.

