கேரளாவில் பள்ளிக்குழந்தைகள் இருவர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கேரளாவில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவலில் இருந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது மக்களிடையே தொடர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நோரோ வைரஸ்
நோரோ வைரஸ் உலகளவில் பரவி வரும் வயிறு தொடர்புடைய நோய்த்தொற்றாகும். வாந்தி, பேதி, குடல் எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி, உடல் வலி, சத்துணவு குறைபாடு ஆகியவை இந்த தொற்றின் அறிகுறிகளாகும். இந்த நோயின் தீவிரம் அதிகமானால் உடல் நீர்ச்சத்து குறையும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 68.5 கோடி பேர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்றால் பாதிக்கப்படும் 20 கோடி பேர் குழந்தைகளே ஆவர்.
கடந்த ஆண்டு
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் முதன் முதலாக நோரோ வைரஸ் தொற்று கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. பின்னர், ஆலப்புழா அருகில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 950 பேர் இந்த நோரோ வைரசால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, நோரோ வைரஸ் பாதிப்பு சுமார் 1 மாதமாக நீடித்ததாக கூறப்படுகிறது.
அறிக்கை
தற்போது, கேரளாவில் உள்ள விழிஞ்சம் நகரில் பள்ளிக்குழந்தைகள் இருவர் நோரோ வைரஸ் பாதிப்பால் பகிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவில் கண்டறியப்பட்ட நோரோ வைரஸ் பாதிப்பு குறித்த முழு அறிக்கையையும், விபரங்களையும் வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேரள கண்காணிப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மாசடைந்த குடிநீர்
இது தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர் ‘தற்போது இந்த தொற்று வேகமாக பரவி வரும் சூழலிலும் இந்த நோய்த்தொற்று தானகவே கட்டுக்குள் வரக்கூடியதாகும். இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவிகிதம் பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தனர். கடந்த ஆண்டு ஆலப்புழாவில் இந்த நோரோ வைரஸ் தொற்று பரவியதற்கு காரணம் மாசடைந்த குடிநீர் என கண்டறியப்பட்டது.
இந்த முறை திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியில் பள்ளிக்குழந்தைகள் இருவருக்கு தற்போது நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்ததான அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்’ என கூறினார்.