வரதட்சணை கொடுமையால் 7 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலையில் உள்ள சே. ஆண்டாபாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா. இவரும் செங்கம் அடுத்துள்ள பெரியகஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவரும் ஏழு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். பின்பு கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் இருவரும் பெரியகஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டில் வாழ்ந்து வந்தனர். விவேகானந்தன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புஷ்பா தனது தங்கையிடம் பலமுறை தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.
வரதட்சணை கொடுமை
இந்நிலையில், நேற்று விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரும்
வரதட்சணை தொடர்பாக புஷ்பாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புஷ்பா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். அதன் பின்னர் விவேகானந்தன் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த புஷ்பாவின் உறவினர்கள், புஷ்பா மரணத்திற்கு காரணமான விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். மேலும், புஷ்பா மரணத்திற்கு நீதி கேட்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பவர்களிடம் குற்றவாளி மீது உரிய விசாரணை செய்து விரைவில் கைது செய்துவிடுவோம் என உறுதியளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரி முன் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.