சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் கே.கேவின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
பின்னணி பாடகர் கே.கே
பிரபல பாடகரான கே.கே என்கிற கிருஷ்ண குமார் குன்னத். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி மக்களை தனது குரலால் கட்டிப்போட்டார். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார்.
எவர் கிரீன் பாடல்கள்
மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் மன்மதன், கில்லியில் அப்படி போடு மற்றும் காதலிக்கும் ஆசை, நினைத்து நினைத்து, உயிரின் உயிரே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, ஒல்லிக்குச்சி உடம்புக்காரி போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும், கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர்கள்
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளரிடம் இணைந்து பணியாறியுள்ளார்.
திடீர் மயக்கம்
கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். அதனால் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழப்பு
ஆனால் எதிர்பாரத விதமாக மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.
சர்ச்சை
அதன்பிறகு இந்த விவகாரத்தில், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அமர்வதற்கு வசதிகள் உள்ளது எனவும், ஆனால் அந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருந்தார்கள் என்ற சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை
அதில், கேகேவின் இதயத்திற்கு செல்லும் வழியில் 80 சதவீத அடைப்பு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவர் அதிக உற்சாகமாக பாடியதால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி தகவல்
இதனிடையே அந்த சமயத்தில் உடனடியாக கேகே விற்கு சிபிஆர் சிகிச்சையை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க அதிக வாய்புகள் இருந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அவர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.