வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 வருட காதல்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு வெங்கடேசன், சபரி கிருஷ்ணன், சந்தோஷ் பாபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 26 வயதான இரண்டாவது மகன் சபரி கிருஷ்ணன் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
சபரி கிருஷ்ணனும் இவரது உறவினரான மயிலாடுதுறை ஆக்கூர் பகுதியை சேர்ந்த 24 வயதான ரேவதி என்னும் இளம் பெண்ணும் கடந்த 10 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்திருக்கின்றனர்.

திடீர் மரணம்
10 வருட காதலை அறிந்த சபரி கிருஷ்ணன் மற்றும் ரேவதியின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்திற்கு ஒன்றரை மாதமே இருக்கும் தருவாயில் சூலை 7ம் தேதி சபரி கிருஷ்ணன் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சபரி கிருஷ்ணனின் மரணம் இரு வீட்டாருக்கும் அதிர்ச்சியை அளித்ததோடு அனைவரையும் மிக சோகத்தில் ஆழ்த்தியது.
மருமகளாக மாறி பணிவிடை
தனது 10 வருட காதலனும், வருங்கால கணவருமான சபரி கிருஷ்ணனின் மரணத்தை தாங்க முடியாத ரேவதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மனதளவில் சபரி கிருஷ்ணனுக்கு மனைவியாக மாறிய ரேவதி தனது பெற்றோரிடம் கலந்து பேசி, தன்னுடைய காதலுனும், வருங்கால காணுவனுமாக இருந்த சபரி கிருஷ்ணனின் பெற்றோருக்கு மருமகளாக மாறி இருக்கிறார்.

காதலன் இறந்த அதிர்ச்சியில் மனதில் துக்கத்தை அடக்கி கொண்டு எம்.எஸ்.சி பட்டதாரியான ரேவதி தற்போது காதலனின் பெற்றோர்க்கு பணிவிடை செய்து அவர்களை பார்த்துக்கொள்ளும் சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது மகன் இறந்த நிலையில் மகனின் காதலி எங்களுடன் இருந்து எங்களுக்காக பணிவிடை செய்வது மகன் இல்லாத குறையை தீர்ப்பது போல உள்ளது என சபரி கிருஷ்ணனின் தாயார் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

