இந்தியா

கண்பார்வை, செவித்திறன் குறைபாடு; UPSC தேர்வில் 683 வது இடத்தை பிடித்துள்ள நேர்மை அதிகாரி!

7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்த நேர்மை அதிகாரி, தளராத தன்னம்பிக்கையால் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

சமூக நலத்துறை அதிகாரி

ரிங்கு சிங் ராஹி என்பவர் உத்திரப்பிரதேச மாநிலம் ஹப்பூரில் சமூக நலத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், 2008ல் உத்திரபிரதேச மாநில தேர்வுத்துறை சார்பில் நடந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தேர்வில் தேர்ச்சி அடைந்ததில் தனது 28 வயதில் சமூக நலத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

corruption

ரூ.83 கோடி ஊழல்

மிகவும் நேர்மையான அதிகாரி என பெயர்பெற்ற ரிங்கு சிங் பணியிடங்களில் முறைகேட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. முசாபர் நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் ரூ.83 கோடி ஊழல் நடந்தது. இந்த ஊழலை பகிரங்கமாக தெரியப்படுத்தினார். இதனால், இவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

துப்பாக்கி சூடு

மர்ம நபர்கள் ரிங்கு சிங்கை 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 குண்டுகள் இவர் மீது பாய்ந்தது. உடனே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்ததால், உயிர் பிழைத்தார். ஆயினும், கண்பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாட்டுக்கு ஆளானார். இவர்மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில் நால்வருக்கு மட்டுமே10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நால்வருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

ரிங்கு சிங்

சகஜமாக பழகுபவர்

இந்த காரணத்திற்காக ரிங்கு சிங் உத்திரபிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். போதி, சர்வாஸ்தி, லலித்பூர் உட்பட பல மாநிலங்களில் ரிங்கு சிங் பணியமர்த்தபட்டார். மேலும், அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்திலும் ரிங்கு சிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். எல்லாரிடமும் சகஜமாக பழகுவதால் பயிற்சி பெற வருபவர்கள் இவரிடம் மிகவும் நெருங்கி பழகுவர் என கூறப்படுகிறது.

இந்திய அளவில் 683 வது இடம்

ரிங்கு சிங்குடன் நன்றாக பழகும் பலர், UPSC தேர்வை எழுத சொல்லி இவரை வலியுறுத்தி இருக்கின்றனர். இதனால், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த UPSC தேர்வை ரிங்கு சிங் எழுதினார். அதன் முடிவுகள் வெளியான நிலையில் ரிங்கு சிங் இந்திய அளவில் 683 வது இடத்தை பிடித்துள்ளார். கண்குறைபாடு, செவித்திறன் பாதிப்பு இருந்தும் தளராது தேர்வெழுதி தேர்ச்சி அடைந்த ரிங்கு சிங் நேர்மைக்கு மிகசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

upsc

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், ‘சகமாணவர்கள் கூறியதால் தான் தேர்வு எழுதினேன். தற்போது வெற்றியும் பெற்றுள்ளேன். இந்தியாவில் நேர்மையானவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், பாதகமான சூழ்நிலை ஏற்படும்போது தான் நேர்மையான சோதனை வருகிறது’ என கூறினார்.

Related posts