பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்ட போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே மாநகராட்சி சார்பாக ஒரு வருட காலமாக பாதாள சாக்கடை குழாய் பாதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈரோடு மாவட்டம் அமராவதி நகரை சேர்ந்த வீரணன் என்ற சதிஷ்(34) என்பவர் பணி செய்து வந்தார். நேற்று காலை முதல் 3 நபர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்துள்ளது. இதில் சதிஷ் 20 அடி பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார்.

ஜேசிபி இயந்திரம்
அப்போது சக ஊழியர்கள் சதீஷின் உடலை மீட்பதற்காக ஜேசிபி இயந்திரம் முலமாக பள்ளம் தோண்டும் போது அவருடைய தலை மட்டும் துண்டாக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த சதீசின் உடலை மீட்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டனர்.
பின்னர், 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு
மேலும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விபத்து தொடர்பாக காவலதுறையினர் விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வார்கள். ஒப்பந்ததாரர் மீது தவறு உள்ளதா என விசாரணை நடத்தி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் . உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள ACCPL நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு, பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது 304(A) பிரிவின் கீழ் கூடல் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மேலாளர் பாலு, பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் உள்ளிட்ட மூன்று நபர்கள் கைது செய்துள்ளனர்.
இது குறித்த செய்தியறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் மனைவி தேவியிடம் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்ட போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மதுரை சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


