வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவ கிராமம்
நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சகாயராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரு மகன்களும் சென்னையில் படித்து வருகிறார்கள். 48 வயதான பவுலின் மேரி, தனது 82 வயதான தாய் திரேசம்மாளுடன் முட்டத்தில் வசித்து வருகிறார்.
நகைகள் கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த பவுலின் மேரி, திரேசம்மாள் இருவரையும் மர்ம நபர்கள் சிலர், இஸ்திரி பெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த 16 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
உறவினர்கள் அதிர்ச்சி
இதனிடையே நேற்று அவர்களது உறவினர்கள் பவுலின் மேரியை செல்போனில் அழைத்திருக்கிறார்கள். பவுலின் மேரியை பதில் அளிக்காததால், பல முறை முயற்சி செய்தும் அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரடியாக வீடிற்கு வந்து பார்த்துள்ளனர்.
போலீசாருக்கு தகவல்
அங்கு இருந்த மின்சார இணைப்பு பெட்டி உடைக்கபட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அங்கே, பவுலின் மேரி மற்றும் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இஸ்திரி பெட்டியால் தாக்குதல்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டை சுற்றி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரி இருவரும் தலையில் வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
விசாரணை
மேலும், விசாரணையில் பவுலின் மேரி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த 16 சவரன் நகைகளும் திருட்டு போய்யிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலை நகைகளை கொள்ளையடிப்பதற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்கள்
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்பெயரில் சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.