நெல்லை அம்பாசமுத்திரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் முத்து பாட்டன் என்ற அஜித் (26). இவருடைய மனைவி சுதா (25). இந்த தம்பதிக்கு ஆறு வயதிலும் இரண்டு வயதிலும் பெண் குழந்தைகள் உள்ளனர்.அஜித் கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில், மனைவி சுதாவுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
எனவே அந்த நபருடனான பழக்கத்தை கைவிடுமாறு கணவர் அஜித் பலமுறை கண்டித்ததால் கடந்த சில தினங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அஜித், தனது மனைவி சுதாவின் தலையை அரிவாளால் துண்டாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, சுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த அம்பாசமுத்திரம் போலீசார், சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அஜித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதா பழக்கம் வைத்திருந்த நபரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருமணத்தை மீறிய உறவை நிறுத்தாத ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

