மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (வயது 41). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு 6,7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை ஒரே நேரத்தில் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
இந்த சம்பவத்தை வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமிகளை ஆனந்த் சேகர் மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுமிகள் இது குறித்து யாரிடமும் வாய் திறக்கவில்லை. எனினும், சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த பெற்றோர்கள், சிறுமிகளை தனியே அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கூலித் தொழிலாளி ஆனந்த் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்தார். அவர் தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என சுட்டிக் காட்டினார். பிஞ்சு குழந்தைகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு தூக்கு தண்டனை விதித்தி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூபாய் 7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆனந்த் சேகர் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

