சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் துறையினர், சக மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பூக்கட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 11- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன், பூக்கட்டும் சிறுவனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த 16 வயது சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்ற அம்பாசமுத்திரம் காவல் துறையினர், அங்கு சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவனைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சிறுவனை அரிவாளால் தாக்கியது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு மாணவர் அளித்த பதிலை பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அந்த மாணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

