ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெரம்பூர் பகுதியில் செபாஸ்டின் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக, செம்பியம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் செபாஸ்டின் உயிரிழந்த நிலையிலும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கேக் சாப்பிட்டு மயக்க நிலையிலும் கிடந்தது தெரிய வந்தது.
மயங்கிய நிலையில் கிடந்த மூவரையும் மீட்ட போலீசார், உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, செபாஸ்டின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நபர்களில் ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, செபாஸ்டினின் மனைவி மற்றும் மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் செபாஸ்டின்(42). தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு, ரெக்ஸி பியூலா (37) என்ற பெண்ணுடன் திருமணமாகி இவாஞ்சலின் (8), இமான் ஆண்டோ (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரெக்ஸி பியூலா, கடந்த சில மாதங்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக, பல இடங்களில் சிகிச்சை பெற்றும், எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வேதனையில் இருந்த செபாஸ்டின், மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என மேலும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருமணத்துக்கு மீறிய உறவை கண்டித்த கணவன் கொலை: மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
இது போன்ற சூழலில் தான், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கேக்கில் விஷம் தடவிக் கொடுத்த செபாஸ்டின், தானும் விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதில், கேக் சாப்பிட்ட அவரது மகன் இமான் ஆண்டோ உயிரிழந்த நிலையில், ரெக்ஸி பியூலாவும், இவாஞ்சலினும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்று, அதில் இருவர் உயிரிழந்து, இருவர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல.. வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம் அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம்.

