கோயில் வாசலில் சிமெண்ட் சாக்கில் சுற்றுப்பட்ட நிலையில், பிறந்த ஒரு சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் சரகம், திருவலஞ்சுழி ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வெள்ளை விநாயகர், சுவேதவிநாயகர் ஸ்தலம் என போற்றப்படும் இக்கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடத்தப்பட்டது. நண்பகல் நடை சாத்தப்பட்ட பிறகு, கோயில் வாசலில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் கோயில் வாசலுக்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. பிறந்த சில மணி நேரமே ஆன அக்குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு, பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
கோயிலை சுற்றுவுள்ள பகுதியை ஆய்வு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அவ்வழியாக நீல நிற இன்னோவா கார் வந்து சென்றது கண்டறியப்பட்டது. அக்காரில் இருந்து 3 மர்ம நபர்கள் இறங்கியுள்ளனர். அவர்கள் குழந்தையை சிமெண்ட் சாக்கில் சுற்றி விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் ஆண் குழந்தை திருவலஞ்சுழி கோயில் முன்பு விட்டு செல்லப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

