விவாகரத்து கேட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் அடுத்த பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29). இவரும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி (31) என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், முகமது அலி தினம்தோறும் மதுகுடித்துவிட்டு, அவரது மனைவி ஷானா பாத்திமாவிடம் பிரச்சனை செய்தும், அவரை அடித்தும் வந்துள்ளார் எனத் தெரிகிறது. தொடர்ந்து இதேநிலை நீடித்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானா பாத்திமா, கணவனைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
ஷானா பாத்திமா கடந்த ஏழு மாதங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் முகமது அலி ஷானா பாத்திமா மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஷானா பாத்திமாவின் பெற்றோர், காதணி விழாவிற்காக மதுரை சென்றுள்ளனர். இதனால் தான் பணிக்கு செல்லும்போது வீட்டை பூட்டுவதற்கு பூட்டு இல்லாததால், அருகிலுள்ள கடைக்கு சென்று புதிய பூட்டு வாங்கி கொண்டு ஷானா பாத்திமாவீட்டிற்கு நடந்த சென்றுள்ளார்.
அப்போது அவர் செல்வதைப் பார்த்த கணவர் முகமது அலி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை கொண்டு வந்து ஷானா பாத்திமாவை வழிமறித்து, அவரது முகத்தில் ஊற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள், ஷானா பாத்திமாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட் இடது கண்ணில் பட்டதில் அவர் பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஷானா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர்.
மேலும் 126(2), 296(b), 124 BNS ஆகிய பிரிவுகளில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த முகமது அலியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியபோது, கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவி நீண்ட நாள்களாக தன்னைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று முகமது அலி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒன்றாக வாழலாம் என பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. மேலும் தனக்கு விவாகரத்து வேண்டும் என தொடர்ந்து கூறியதால் ஆத்திரமடைந்து அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முகமது அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை பல்லாவரம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

