அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு எந்தவொரு நிபந்தனையையும் தாங்கள் வைக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில், தஞ்சை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களில் பாஜக சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிமுக சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது. அதனால்தான், எந்தவொரு கோரிக்கையையும் நிபந்தனையையும் வைக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அமமுக கூட்டணி வைத்துள்ளது.
நான் சட்டமன்றத் தேர்தலில் கூட நிற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளேன். அதற்கு காரணம், தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசினார்.அதைத் தொடரந்து, திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அதிமுக மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகர செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

