அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கெனவே நடந்த தவெகவின் 4 கூட்டங்களைப் பார்த்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பை அரசும் காவல் துறையும் கொடுத்திருக்க வேண்டும்.
அதேபோல் அதிமுகவின் எழுச்சிப் பயணித்தின்போதுகூட முழுமையான பாதுகாப்பை அரசு கொடுக்க வில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலாசித்து, செயல்பட்டிருக்க வேண்டும்.
அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, காவல் துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

