விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்திற்கு செல்போன் மூலம் இபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் 10-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய அலட்சியம் காட்டியதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி வீட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலமாக மாணவியின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாணவியின் தாயாரிடம் பேசிய அவர், இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்கிறதா? என்று பார்ப்போம். இல்லை என்றால் எங்கள் ஆட்சி (அதிமுக) வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள்” என தெரிவித்தார்.

