யிற்று தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிஷேக் சர்மா, தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் அதிரடி வீரர் திலக் வர்மா பங்கேற்றார். அதில் அவர், வயிற்று தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிஷேக் சர்மா, தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஆனால் அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய திலக் வர்மா, “நாங்கள் இங்கு வந்தடைந்ததும், அபிஷேக் சர்மா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்சமயம் அவர் நலமுடன் உள்ளார். இருப்பினும் அவர் தற்சமயம் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும். அதே போல் ஜஸ்பிரித் பும்ராவும் நலமுடன் உள்ளார். போட்டி நாளை நடைபெற இருப்பதால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் முடிவை எடுக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த தொடரில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. டி20 என்பது ஒரு சிறிய வடிவம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகக் கோப்பை அணியில் மீண்டும் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது உலகக் கோப்பையை வெல்வதே எங்களின் குறிக்கோள். அணிக்காக பங்களிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போட்டி குறித்து பேசிய திலக் வர்மா, “இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட ஆர்வமாக இருந்ததுடன், அதற்கு ஏற்கெனவே தயாராவும் இருந்தோம். இந்நிலையில் போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் நாங்கள் உற்சாகத்துடன் அந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாதபட்சத்தில், அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் அணியின் தொடக்க வீரராக விளையாடுவார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்திய அணியின் முதன்மை தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

