புரொமோஷனின் புதிய யுக்தியை கையாண்டுள்ளது விக்ரம் படக்குழு. இதனால் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விக்ரம் படம்
1986ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ளது விக்ரம் படம். இதில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ்
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இருந்தே படத்தின் ப்ரோமோஷன்ஸ்களில் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது படக்குழு. முதலில் படத்தின் டைட்டிலை அறிவிப்பதற்கு ஒரு டீசர், க்ளிம்ப்ஸ் காட்சி என்று வெளியிட்டு தேதி அறிவிப்பதற்கு முன்பே ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கியது விக்ரம் படக்குழு.
சர்வதேச திரைப்பட விழா
படம் வரும் 3ம் தேதி வெளியாகும் நிலையில் ப்ரோமோஷன்ஸ் வேலைகள் தற்போது சூடுபிடித்துள்ளது. கடந்த 15ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
ப்ரோமோ
கடந்த வாரம் பஞ்சதந்திரம் படத்தில் இடம்பெற்ற நண்பர்கள் கதாப்பாத்திரம் தற்போது கமலை பற்றி பேசிக்கொள்வது போன்ற ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. இந்நிலையில், நாளை புர்ஜ் கலிபாவில் வெளியிட போவதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
புர்ஜ் கலிபாவில் வெளியிடு
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. துபாய்யில் உள்ள இந்த கட்டிடம் 163 மாடிகளைக் கொண்டது. சுமார் 828 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது 2,716.5 அடி உயரமாகும். உலகளவில் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டுமே அங்கு திரையிடப்படும். அந்த வரிசையில் தற்போது விக்ரம் இடம் பெற்றுள்ளது. உலகின் மிக உயரமான ஸ்க்ரீனான புர்ஜ் கலிபாவில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் நாளை இரவு 8.10-க்கு திரையிடப்படுகிறது. இதை விக்ரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.