நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் பள்ளி மாணவனர் ஒருவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி ஓட ஓட துரத்திச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா
படங்களில் சாதி குறித்த எத்தனையோ வன்முறைகளை பார்த்திருப்போம். ஆனால், தற்போது பள்ளிமாணவர்கள் மற்றும் சில மனித நேயமற்றவர்கள் நேரலையாகப் சாதி வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகளுக்கு மாறாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதிவெறி கொண்டு அலைந்து திரிகின்றனர்.
மாணவன் கொலை
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாப்பக்குடி பகுதியில் சூர்யா என்ற 17 வயது சிறுவனை சக மாணவர்கள் அடித்து கொலை செய்தனர். ஜாதிரீதியக கயிறு கட்டுவதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சூர்யா என்ற மாணவரை சக மாணவர்கள் கல்லால் அடித்து தாக்கினர். தாக்கப்பட்ட மாணவனை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் அரங்கேறி ஒரு மாதம் ஆவதற்குள் சாதி கயிறால் நெல்லையில் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
சாதி வெறி
நெல்லையில் உள்ள சிஎஸ்ஐ மண்டலத்துக்கு உட்பட்ட கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த மாணவன் ஒருவன் தனது கையில் நீலநிற மற்றும் மஞ்சள் நிற கயிறு கட்டிருந்ததையும், நீல வண்ண சட்டை அணித்திருந்ததையும் கண்ட 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் கையில் கட்டியிருக்கும் கயிறை கழற்ற சொல்லி மாணவனை சாதி ரீதியாக வற்புறுத்தியிருக்கின்றனர்.
அரைநிர்வாணமாக
இதனால், ஏற்பட்ட மோதலில் கயிறு கட்டியிருந்த மாணவன் மீது 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் சரமாரி தாக்குதலை நடத்தினர். அம்மாணவனின் சட்டையை அடித்து கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டனர். அடி தாங்கமுடியாத மாணவன் தப்பிப்பதற்காக அரைநிர்வாணமாக சாலையோரம் ஓடியிருக்கிறார். அந்த 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் வெறியோடு கத்திக்கொண்டே மாணவனை துரத்தி உள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து பேருந்து நிலையத்தில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை எச்சரித்து துரத்தி விட்டனர்.
சாதி கயிறால் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.