வேலூரில் காதலி பேசாமறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிக்கு கத்திக்குத்து
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (20). அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர். இந்நிலையில், இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக்கண்ட பேருந்து நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியை குத்திய பின்பு மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

