கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் சிறுவனுக்கு பறிபோன கண் பார்வை விவகாரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
அரவிந்த் கண் மருத்துவமனை
இராஜபாளையம், அருகே சோழபுரத்தை சேர்ந்தவர் முக்கையா. இவர் தனது மகன் அர்ஜுனனை கடந்த 2002ம் ஆண்டு தளவாய்புரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் தனது மகனுக்கு கண் பரிசோதனை செய்துள்ளார். அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்துள்ளார். தொடர்ந்து சிறுவன் அர்ஜுனனுக்கு மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது பார்வை குறைபாடு சரியாகவில்லை. தொடர்ந்து 2009ம் ஆண்டு வரை தொடர் அறுவை சிகிச்சை செய்தும் மேற்படி சிறுவனுக்கு பார்வை கிடைக்கவில்லை.
இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுவனின் கண்ணை பரிசோதித்த நிலையில் சிறுவனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுவனின் தந்தை மூக்கையா விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழக்குச் செலவு இழப்பீடு உட்பட ரூபாய் 10 லட்சம் அரவிந்த் கண் மருத்துவமனை வழங்க வேண்டும் என நீதிபதி சேகர் உத்தரவிட்டார்.

