கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளம் அட்லாண்டிக் பெருங்கடலோடு பங்கிடும் நீண்ட கடல் எல்லையை கொண்ட நாடு தான் போர்ச்சுகல். கடல் தான் இந்த நாட்டின் அடையாளம். கடலை சார்ந்து தான் இந்த நாட்டின் பெரு வணிகங்களும் அமைந்துள்ளன. இந்த நாட்டின் தலைநகரமான லிஸ்பன் நகரம் அழகு நிறைந்த டாகஸ் (Tagus ) நதியின் அருகில் அமைந்துள்ளது.15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த மாலுமிகள் இந்த போர்டுகள் நாட்டின் கடற்கரையிலிருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர். அவ்வாறு பயணித்து இந்திய நாட்டிடை வந்தடைந்தவர் தான் வாஸ்கோ ட காமா (Vasco da Gama).
போர்ச்சுகல் நாட்டின் பிரதான சுற்றுலா தலங்களைப் பற்றிப் பார்ப்போம்.
Mosteiro dos Jerónimos, Lisbon :
1498 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமா , போர்ச்சுகளிலிருந்து இந்தியாவுக்கான கடல் பாதையை கண்டுபிடித்தற்காக, போர்ச்சுகல் நாட்டின் மன்னராக இருந்த முதலாம் மானுவல் (King Manuel 1) , அவரை பாராட்டி அவருக்காக ஒரு பிரம்மாண்ட நினைவு சின்னத்தை எழுப்பினார்.அப்படி உருவான கட்டிடம் தான் இது. இந்த பிரம்மாண்ட தேவாலயத்தின் உள்ளே வாஸ்கோ ட காமாவின் கல்லறையும் உள்ளது. உள்ளே பல அரிய பொக்கிஷங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Oceanário de Lisboa, Lisbon :
ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய மீன் காட்சியகம் இது தான். உலகின் பல்வேறு கடல் சார்ந்த வாழ்வியலும் அந்த கடல்களில் வாழும் உயிரினங்களை பற்றியும் இங்கே விளக்கி கூறப்படுகிறது. ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் இங்கே பெரிய கண்ணாடி பேழைகளில் வளர்க்கப்படுகின்றன. அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடல், அண்டர்க்ட்டிக் பெருங்கடல் என்று பல்வேறு கடல் சார்ந்த வாழ்விடங்களை தத்ரூபமாக இங்கே உருவாக்கியுள்ளனர். காட்சியகத்தின் நடுவே ஒரு பிரம்மாண்ட கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சுறா, திருக்கை என்று ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் அந்த தொட்டியில் நீந்தி செல்லும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.
Palácio Nacional de Sintra, Lisbon Coast :
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அற்புதமான அரண்மனை பிரம்மாண்ட மலைத்தொடர்கள் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போர்ச்சுகல் நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடைக்காலத்தை செலவழிக்க இந்த இடத்தை தான் தேர்ந்தெடுத்தனர். நடுவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை, சுற்றிலும் குறுகிய தெருக்கள் என இந்த Sintra பகுதி வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவிலான புகைப்போக்கிகள் தான் இந்த கட்டிடத்தின் தனிச்சிறப்பு. 14 ஆம்
நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்த அரண்மனை, போர்ச்சுகல் நாட்டின் மிகப்பழமையான கட்டிடமாகும்.
Torre de Belém, Lisbon :
லிஸ்பன் நகரத்தின் அடையாளம் என்று குறிப்பிடப்படும் இந்த பழமைவாய்ந்த கட்டிடம் 1521 ல் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். Francisco de Arruda எனும் கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இந்த கோட்டை, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகல் நாட்டின் கடல்வழி வணிகம் மற்றும் போக்குவரத்துக்கு சாட்சியாய் பல நூற்றாண்டுகளாக நின்று வருகிறது. இந்த கட்டிடமும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Convento do Cristo, Tomar :
தோமர் (Tomar) என்ற நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது இந்த கம்பீரமான அரண்மனை. இங்கே அமைந்துள்ள தேவாலயம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 1160 ஆம் ஆண்டு Knights Templar எனும் அரசவை காவலர் குழுவினரின் தலைமையிடமாக விளங்கியது இந்த அரண்மனையும் அதனை ஒட்டியுள்ள தேவாலயமும்.
போர்ச்சுகல் நாட்டின் மற்ற சுற்றுலாத்தலங்களைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.