கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 25வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியின் பேட்டிங்
கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஆரன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். கொல்கத்தா அணியிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 30 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து. அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டனின் இடத்தை நிரப்ப வந்த சுனில் நரைன் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நிதிஷ் ராணா சிறப்பாக விளையாடி அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அவரை அடுத்து களமிறங்கிய ரஸலும் அதிரடி காட்ட, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களைக் குவித்தது.
சன் ரைசரஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மார்க்கமாக அமைந்த மார்கரம்
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கனே வில்லியம்சன் களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் வில்லியம்சனும் 17 ரன்களில் நடையைக் கட்டினார். பின்பு இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் மார்கரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
சிறப்பாக விளையாடி அரை சதம் எட்டிய திரிபாதி ரஸலிடம் சரணடைந்தார். வெற்றிக்காக போராடிய மார்கரம், அரை சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சன் ரைசர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.