பெரியாழ்வார் குரோதன வருடம்; (700–785AD); ஆனி-9, ஞாயிற்றுக் கிழமை- சுவாதி நட்சத்திரம்; ஏகாதசி திதியில்; கருடன் அம்சமாக; முகுந்தாச்சார்யார்-பதுமையார் தம்பதியர்க்கு மகனாக அவதாரம் செயதார்.
பெரியாழ்வாரின் இயற்பெயர் ராமஆண்டான் . இவர் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.
வேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.
வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர்-பதுமவல்லி என்னும் தம்பதியர் , நல்லறத்தை நடத்தி வந்தகாலத்தே, திருமகள் நாதனின் அருளால் அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே பிற்காலத்தில் போற்றிப் புகழப்படும் பெரியார்வார் ஆவார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தர். இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த ஒரு பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி வருவாராயினார்.
வல்லபதேவ பாண்டியன் கூடல் என்ற மதுரை நகரில் அரசு செலுத்திவந்தான். வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார்.
அந்த வேதியரும்,மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும்,இரவுக்காகப்பகலிலும்,கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும்,மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார்.
மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.
அந்த அந்தணனின் வாக்கின்படி இந்த உலகத்திலேயே பரலோகத்திற்கு வேண்டிய நற்கதியைப் பெறுவதற்கான விஷயங்களை ஏற்படுத்தித் தருதல் என்பதை அறிந்து தன் புரோகிதனான செல்வநம்பியை பரம்பொருளை நிர்ணயம் செய்வது எவ்வாறு என்று விளவினான். செல்வநம்பி வித்வான்களைக் கூட்டி விவாதம் நடத்தி செல்வம் நிறைந்த பொற்கிழி ஒன்றை சபா மண்டபத்தில் ஒரு தோரணத்தில் கட்டி,, எந்த வித்வானுக்குக் கிழி தாழ்கிறதோ, “பரம்பொருள்” இதுதானென்று அவர் அளிக்கும் விளக்கமே உண்மையானது என்றுகொள்ளவேண்டும் என்று பணித்தான்.
இதனிடையில், விஷ்ணுசித்தரின் கனவில் எம்பெருமான் தோன்றி, அவரை அந்த மண்டபத்திற்குச் சென்று தன்னைப் பற்றி பேசி, தன் பரத்துவத்தை நிரூபணம் செய்யுமாறு பணித்தான். இதைகேட்ட இவர் மிகவும் அஞ்சி, பெரிய வித்வான்களுக்கு இடையில் ஒன்றும் தெரியாத தான் எப்படி உம்மைப்பற்றி பேசி வெற்றிகொள்வது என்று கேட்க, எம்பெருமான் “நீர் அங்கு செல்லும் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார்.
பின்னர் தான் கனவில் கொண்ட எம்பெருமானின் ஆணைப்படி பல வித்வான்கள் கூடியிருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது கூடியிருந்தவர்கள் நகைத்துப் பேசினர். சபைக்கு வந்தோரை அவமதித்தல் தருமமன்று என்று கூறி, செல்வநம்பி விஷ்ணுசித்தரை அழைத்து வேதாந்தங்கள் கூறும் பரம்பொருள் யார் என்று நிச்சயிக்க வேண்டினான்.
விஷ்ணுசித்தர் ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள் என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார்.
பெரியாழ்வார் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார். இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தனர். மேலும் அரசன் இவருக்கு “பட்டர்பிரான்” என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.
தன்னை நிரூபித்து இப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காண, எம்பெருமான் தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான். தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர். இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார்.
தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு “பல்லாண்டு பல்லாண்டு“ என்று பாடத் தொடங்கினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோமொடும் நின்னொடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே!
விஷ்ணுசித்தர் பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார். தான் பெற்ற செல்வமனைத்தையும் வடபெரும் கோயிலுடையானுக்கு அளித்து, தன் பழைய தொண்டான திருமாலை கட்டுதலையே நித்தியமாகக் கொண்டார். எம்பெருமானிடம் அன்பைக் கூட்டி பரிவு கொண்டிருந்தார். திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால், ‘பெரியாழ்வார்‘ என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர்.