சில மாதங்களுக்கு முன்பு நாடோடிப் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கோவிலில் உணவு மறுக்கப்பட்டது. இது சம்பந்தமாக அந்த பெண் வளையொலியில் அளித்த பேட்டி ஒன்று வைரலானது.
இதையடுத்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அந்த பெண்ணுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும், முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று நாடோடிப் பழங்குடி இன மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா போன்றவற்றை வழங்கினார்.
ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் இதே போன்றதொரு, நாடோடிப் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவியின் காணொளி ஒன்றும் வைரலானது. முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியுடன் காணொளி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். மேலும், தலைமை செயலகத்துக்கு வருமாறு அந்த மாணவியை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். பதிலுக்கு அந்த மாணவி முதல்வர் ஸ்டாலினை தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். முதல்வரும் தான் வருவதாக உறுதியளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல்வர் ஸ்டாலின் ஆவடியில் உள்ள நாடோடிப் பழங்குடி சமூக குடியிருப்புக்கு சென்றதோடு அந்த மாணவியின் வீட்டில் உணவு சாப்பிட்டார். பிறகு நாடோடிப் பழங்குடி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஸ்டாலின் நாடோடிப் பழங்குடி மக்களை நேரடியாக சென்று சந்தித்தும் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தும் வருகிறார். முதல்வரின் இச்செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அதேசமயம் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன்பாக குறவர் இனப் பழங்குடியினர் போராட்டம் நடத்தினர். (நாடோடி பழங்குடியினர் என்பவர்கள் வேறு; குறவர் இனப் பழங்குடியினர் என்பவர்கள் வேறு)

“குறவர் இனப் பழங்குடி மக்களாகிய நாங்கள் மட்டும் தான் குறவர்கள். குருவிக்காரர்கள் என்பவர்களை நரிக்குறவர்கள் என்றும் குறவர்கள் என்றும் அழைக்கக்கூடாது. தங்களை எம்பிசி (MBC) பிரிவிலிருந்து பழங்குடியினர் (ST) பிரிவில் இணைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க குறவர் இன பழங்குடி மக்கள் வந்திருந்தனர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் முதல்வரை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாடோடி பழங்குடியினரை மட்டும் சந்திக்கும் ஸ்டாலின், குறவர் இன பழங்குடி மக்களை சந்திக்க மறுத்தது கோரிக்கை கொடுத்த குறவர் இன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
