அரசியல்

இந்தியா சமதர்ம நாடா அல்லது சர்வாதிகார நாடா? – ப. சிதம்பரம் கேள்வி.!

சிவகங்கை மாவட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பேசியது: இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றியதன் காரணமாக ஏராளமான கடன் வாங்கியதும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் போனதுமே இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.

இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் சாயல் இந்திய அரசின் கொள்கைகளிலும் கண்கூடாக தெரிகின்றது. இந்திய அரசால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏராளமான கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.இந்த தவறான கொள்கைகளை தொடர்ந்து இந்திய அரசு பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கும் வரக்கூடிய அபாயம் உண்டு என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மேலும், இந்தியாவில் நடந்துவரும் இந்தி திணிப்பைப் பற்றி பேசிய அவர், ‘கடந்த 7 ஆண்டாக இந்தியால் ஏற்படும் பேராபத்தை சொல்லி வருகிறோம். ஒரு நாடு; ஒரு மொழி என்பது பா.ஜ.க வினர் கடைசியாக எடுத்துள்ள அஸ்திரம். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது மத்திய அரசின் குறிப்பு ஆவணங்களில் 70 சதவீதம் இந்தியில் வந்துவிட்டதாக கூறுகிறார்.

இந்தியாவில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், ‘நீட்’ தேர்வை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.  இன்று ‘கியூட்’ (CUTE)தேர்வு என கூறுகின்றனர். பா.ஜ.க வின் நோக்கம் ஒரு நாடு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என்றே உள்ளது. சீனா, ரஷ்யா, துருக்கி, பர்மா போன்ற நாடுகள் போகும் பாதையில் தான் இந்தியா போகிறது.
ஒரே நாடு – ஒரே தேர்வு – ஒரே தேர்தல் – ஒரே உணவு முறை என்றால் இது சமதர்ம நாடா அல்லது சர்வாதிகார நாடா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் இதே எச்சரிக்கையை விடுத்தனர். பல்வேறு மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதல பாதாளத்திற்கு செல்லும் எனவும், மாநில நிதி நிலைமையை சீரமைக்காமல் இருந்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற பொருளாதார நெருக்கடியை இந்தியாவும் சந்திக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் எச்சரித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெரும் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளால் இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியா விற்கும் ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

Related posts