21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு ஏற்ப நாம் பயன்படுத்தும் பொருட்களும், அறிவியல் தொழில்நுட்பமும் மாறுபாடு அடைந்துள்ளது. அதில் முக்கியமானதாக மின்சார வாகனம் கருதப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வு, வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது எரிபொருள் வாகனத்திற்கு மாற்றாக மக்கள் மின்சார வாகனத்தை பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில், மின்சார வாகனத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
விலை குறைவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக, அங்கீகரிக்கப்படாத மற்றும் தரமற்ற நிறுவனத்தின் மின்சார வாகனத்தை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் ஏற்படும் ஆபத்தை உணரவில்லை. தரமற்ற நிறுவனத்தின் வாகனங்கள், கோடை கால வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தீப்பற்றி எரிந்து வருகிறது.
மின்சார வாகனத்தின் பயன்கள்
மின்சார வாகனங்களில் முக்கியமாக எரிபொருளின் செலவு குறைவு. மின்சார வாகனங்களை அடிக்கடி பழுது பார்க்க தேவை இல்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை பேட்டரி திறன் மற்றும் மோட்டார் சரி பார்க்க வேண்டும். மின்சார வாகனங்களில் இஞ்ஜின் ஆயில் மற்றும் இதர ஆயில்கள் மாற்றும் செலவு இல்லை. மின்சார வாகனங்களில் எவ்வளவு வேகமாக சென்றாலும் அதிர்வு குறைவாகவே இருக்கும்.மேலும், இந்த வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று எவ்வித சத்தத்தையும் ஏற்படுத்தாது. பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று மின்சார வாகனங்களில் மழை மற்றும் குளிர் காலங்களில் ஸ்டார்ட் செய்யும் பிரச்சனை வருவதில்லை. மின்சார வாகனங்களில் பேட்டரி மற்றும் மோட்டார் மட்டுமே இருப்பதால் வண்டியின் எடை மிக குறைவாகவே உள்ளது. எரிபொருள் வாகனத்தை போன்று புகை ஏதும் வருவதில்லை. அதனால் சுற்றுபுறச்சூழல் மாசடைவது குறைகிறது.
மின்சார வாகனத்தினால் ஏற்படும் தீமைகள்
மின்சார வாகனத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் வாரண்ட்டி 3 வருடங்கள் மட்டுமே. அந்த காலக்கட்டதில் நிறுவனம் கூறிய மைலேஜை தரும். அதன்பிறகு நிறுவனம் கூறிய மைலேஜை தருவது சந்தேகம் தான். மின்சார வாகனத்தை வீட்டிற்கு வெளியே வைத்து தான் சார்ஜ் செய்ய இயலும்.
பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனத்தை ஒட்டிசென்றால், விளக்குகளால் பேட்டரிகளின் அளவு விரைவில் குறைகிறது. அதனால் நாம் செல்ல நினைக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் போகலாம்.
மழைக்காலங்களில் வாகனத்தின் பேட்டரிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. மின்சார வாகனத்தை அனைத்து கடைகளிலும் கொடுத்து பழுது பார்க்க இயலாது. தகுந்த கடைகளிலையே பழுது பார்க்க இயலும். எரிபொருள் வாகனத்தை போன்று வேகமாக இயக்கினால், பேட்டரியின் அளவு வேகமாக குறையும். வாகனத்தை இயக்கும் போது சத்தம் வராததால் வளைவுகளில் ஹார்ன் அடிக்காவிட்டால் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.