சமூகம்

வட இந்தியாவிற்கு போய் ஊர் சுற்றுங்கள்.. பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய காவல் துறை அதிகாரி!

‘வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றுங்கள்’ என்று பெண்ணிடம் மிகவும் மோசமாக காவல்துறை அதிகாரி ஒருவர் நடந்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மதுமிதா பைத்யா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு காவல் அதிகாரி தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக தமிழ்நாடு காவல்துறை பக்கத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டது, “நேற்று இரவு இசிஆர் கடற்கரையில் உள்ள சி ஷெல் அவின்யூ என்ற இடத்தில் எனது நண்பருடன் அமர்ந்து நான் பேசிக்கொண்டு இருந்தேன். கடற்கரையின் நேர வரைமுறை குறித்து அறிந்திருக்கவில்லை.

அப்போது அங்கு ஒரு காவல் துறை அதிகாரி மிகவும் கோவமாக வந்து ஒரு தீவிரவாதியை விசாரிப்பது போல் என்னை விசாரணை செய்தார். அதோடு மட்டுமல்லாமல் வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றுங்கள் என்று சாடினார்.

அப்போது நான் அந்த காவல் துறை அதிகாரிக்கு பதில் அளித்தேன். உடனே அவர் எங்களை காவல்துறை வாகனத்தில் ஏறச்சொல்லி மிரட்டினார். மிகவும் மோசமான முறையில் என்னிடம் நடந்து கொண்டார். நான் குற்றவாளி அல்ல, நல்ல முறையில் நடந்து கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு குறித்து ட்விட்டரில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இதற்கு தமிழக காவல் துறையின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பணியில் இருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts