பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ 24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் 23 வது போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணி மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 198 ரன்களைக் குவித்தது. பின்னர், 199 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியடைந்தது. இது மும்பை அணிக்கு ஐந்தாவது தொடர் தோல்வியாகும்.
இந்நிலையில், இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதன் காரணமாக, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ 24 லட்சம் அபராதம் விதித்தது. அத்துடன் அணியில் விளையாடிய வீரர்களுக்கும் ஊதியத்திலிருந்து 6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மும்பை அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பே டெல்லி உடனான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்கு, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.
ஐபிஎல் விதிகளின்படி ஒரு சீசனில் மூன்று முறை தாமதமாக பந்து வீசினால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இந்நிலையில், ஏற்கனவே இரண்டு முறை தாமதமாக பந்து வீசியுள்ள மும்பை அணி வரும் போட்டிகளிலும் இதை தொடர்ந்தால், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளைப் பெற்றதால், ப்ளே ஆஃப்பிற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. மும்பை அணியின் பலமே கேப்டன் ரோஹித்தின் பேட்டிங் மற்றும் அவரின் கேப்டன்ஷிப் தான். இதற்கிடையே, ஒரு போட்டியில் கேப்டனை தவற விட்டால் மும்பை அணியின் நிலை என்னவாகும் என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மும்பை அணியை குறித்து இங்கிலாந்த் அணியின் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வேங் கருத்து தெரிவித்தார். அதில், ‘ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் எந்த குறையும் இல்லை, மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் எளிதில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்’ என்று கூறியிருந்தார்.ஐபில் தொடர்களில் இதுவரை அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள மும்பை அணி ப்ளே ஆஃப்பிற்கே தடுமாறுவது ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இருப்பினும், ‘மும்பை அணி மீண்டும் வரும். இந்த முறையும் நாங்க தான் சாம்பியன்ஸ்’ என்று மும்பை அணி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.