திருமண வரவேற்பில் தாம்பூலப் பை முதல் ஃபிளக்ஸ் பேனர் வரை தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்களின் முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டப்படாத இலக்காகவே இருந்து வருகிறது. கல்வி, வேலை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் இடம் பெயர்ந்து இருப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு முழு வாக்குப்பதிவு எட்டாக் கனியாக உள்ளது.
இருப்பினும் கடந்து பல ஆண்டுகளாகவே பொதுத்தேர்தலின்போது முழுமையான வாக்குப்பதிவை சாத்தியப்படுத்தும் நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் முழு வாக்குப்பதிவு ஏற்பட தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதவிதமான முயற்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திசையன்விளை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமக்கள் 100% வாக்குப்பதிவு ஏற்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
திசையன்விளை பகுதியில் நேற்றிரவு தனியார் மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் தாமரைச்செல்வன் மற்றும் செல்வப்பிரியா தங்களது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு வழங்கிய தாம்பூலப் பையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கினர்.
அந்தப் பையில் “வாக்குரிமை நமது கடமை”, “தேசத்தின் மாற்றத்தை விரல் நுனியில் எழுதுவோம்”, மற்றும் “100% வாக்களிப்போம்” போன்ற வாசகங்களுடன் வாக்குப்பெட்டி படமும் இடம்பெற்றிருந்தது. மேலும் திருமண மண்டபம் முழுவதும் “பணத்திற்கு வாக்கு அளிப்பதைத் தவிர்ப்போம்”, “நேர்மையான முறையில் வாக்களிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
திருமண நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மணமக்களின் முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக திருநெல்வேலியில் முழு வாக்குப்பதிவை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

