தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 234 தொகுதியிலிருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளைய தினம் விஜய் வெளியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் வந்தது முதல் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் நாளை வெளியிட உள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை வரும் 28 ஆம் தேதி வட சென்னையான பெரம்பூரில் இருந்து துவங்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வரும் 28 ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்.கே.பி நகர் பகுதியில் இருந்து விஜய் தமது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார். ஒரே நாளில் சென்னையில் உள்ள ஐந்து தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பெரம்பூரில் துவங்கி, கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் வரும் சனிக்கிழமை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
விஜயின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, தவெக சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அளிக்கப்பட்ட மனுவில், விஜய் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு தொகுதியிலும் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 28ஆம் தேதி பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதியையும் வழங்கி உள்ளது.
வேட்பாளர் தேர்வை பொருத்தவரை ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டு கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. இறுதிகட்டமாக வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக நாளைய தினம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 234 தொகுதியிலிருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் அல்லது தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கான அனுமதி வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

