நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ஓர் பிராமண ஏகாதிபதியவாதி எனவும், அவர் கட்சிக்குள்ளாக ஏற்ற – தாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதன் காரணத்தினாலேயே கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் விலகியதாகவும, நடிகர் கமலை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள தொல்காப்பியன்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, மாநில நிர்வாகிகளையோ, தேர்ந்த அரசியல் புரிதல் உள்ளவர்களையோ அருகில் வைத்துக்கொள்ளவும், ஆலோசனை கேட்கவும் கமல் விரும்புவதில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களாக இருந்தவர்களின் ஆலோசனையையே இப்போதும் அவர் கேட்டு நடக்கிறார்.
மேலும், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளின் மேடைகளில் தான் மட்டும் அமர்ந்துகொண்டு மாநில நிர்வாகிகளை நிற்கும் படி செய்வது என திட்டமிட்டே ஏற்ற – தாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமில்லாமல், பிராமண ஏகாதிபத்தியவாதியாகவும் இருக்கிறார் கமல். அதன் காரணத்தினாலேயே முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினார் எனவும் நடிகர் கமலை கடுமையாக சாடியுள்ளார் தொல்காப்பியன்.
முன்னதாக, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் கமலின் நடவடிக்கைளில் அதிருப்தி கொண்டு மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்புகளிலிருந்த மகேந்திரன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.