காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயன்று வரக்கூடிய சூழலில், அப்படி மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டினால் அது டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குமென கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது தமிழக அரசு.
மேலும், நேற்றைய தினம் மேகதாதுவில் தடுப்பணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாதென தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தரப்போவதில்லை எனவும் பேசியிருந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழக அரசின் தனித்தீர்மானம் எங்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசி இயற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார் பசவராஜ் பொம்மை.