Editor's Picksதமிழ்நாடு

கட்சியை திமுகவுடன் இணைத்திடுங்கள் ; மதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி!

வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினை, திமுகவுடன் இணைத்திட வேண்டுமென அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ள சம்பவம் மதிமுகவிற்குள் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வலம்வந்த வைகோ, திமுகவில் கட்சி தலைவர் கருணாநிதியின் மகன் என்பதற்காகவே மு.க ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுவதாக கூறி திமுகவிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினை தொடங்கி நடத்திவரக்கூடிய சூழலில், சிறிது காலத்திற்கு முன்னதாக மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக தனது மகன் துரை வைகோவினை நியமித்தார். வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சியில் வாரிசு அரசியலா என அப்போதே வைகோ மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்படக்கூடுமென்ற செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்க கூடிய சூழலில், மதிமுகவின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் மதுரை அழகுசுந்தரம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவந்தியப்பன் உள்ளிட்டோர், ஈழம் உள்ளிட்டவற்றை பேசி ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கையையே வீணாக்கியவர் வைகோ. திமுகவுக்கு உழைத்த ஸ்டாலினை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, கட்சிக்காக எந்த உழைப்பையும் கொடுக்காத அவரது மகன் துரை வைகோவை எங்களுக்கு தலைவராக்க நினைப்பதை எப்படி ஏற்க முடியும் என்றனர்.

மேலும், வாரிசு அரசியலை வளர்க்க நினைப்பதனை விடவும், திராவிட இயக்கங்களை வளர்க்கும் பொருட்டாவது மதிமுகவை திமுகவுடன் வைகோ இணைத்திட வேண்டுமென்றனர் காட்டமாக.

Related posts