இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்த… இருக்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
1999 ம் ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகிய மிதாலி ராஜ், தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக இருக்கும் மிதாலி ராஜ் பெண்கள் கிரிக்கெட்டின் அடையாளமாக மாறி இருக்கிறார்.
அவரின் நிதானமான நுட்பமான ஆட்டமுறை உலகின் பல கிரிக்கெட் ஜாம்பவான்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. கிரிக்கெட் என்றால் ஆண்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு என்ற பார்வையை மாற்றி பெண்கள் கிரிக்கெட் அணியின் மீதும் கவனத்தை திருப்பியவர்களில் மிதாலி ராஜ் ஒருவர்.
‘லேடி’ டெண்டுல்கர்
இந்திய ஆண்கள் அணியின் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, டிராவிட், சுனில் கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர் போன்றவர்கள் கோலோச்சி இருந்த காலத்தில் இந்திய பெண்கள் அணியை பற்றி பேசும்படி செய்தவர் மித்தாலி ராஜ். மகளிர் கிரிக்கெட் அணியின் ” லேடி டெண்டுல்கர் ” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். Test, ODI மற்றும் T20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜ் வெறுமனே ஆட்டக்காரராக மட்டுமில்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட்டில் ஆட்டக்காரராக இருந்துகொண்டே அதே அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றுவது மிக சிலருக்கு நடந்து இருக்கிறது.
மித்தாலி ராஜ் பெற்ற விருதுகள்
2003 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது
2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது
2017 ஆம் ஆண்டு BBC அறிவித்த 100 பெண்களில் ஒருவர் விருது
2017 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட்டர் விருது
2021 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்.
மித்தாலி ராஜ் ஆக வாழும் டாப்ஸி
தனுஷ், டாப்ஸி நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ஆடுகளம். இப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டாப்ஸி பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் வாங்கியுள்ளார். பெண்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் மிதாலி ராஜ் ஆக நடித்துள்ளார். இதற்காக அவர் பல மாதங்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மித்தாலி ராஜ் யிடம் பழகி அவர் போல உடல் அசைவுகளை கற்றுள்ளார். தற்போது அந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கூடிய விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வருகிறது.