சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகிய நிலையில், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் வாடிவாசல் படத்திற்கு ப்ரீ ப்ரொடக்ஷன் முடியாததால் படக்குழுவினர் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
மீண்டும் பாலாவுடன்
இதையடுத்து சூர்யா அந்த இடைவெளியை நிரப்புவதற்காக பாலாவின் படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா போன்ற நட்சத்திரப் பட்டாளங்களும் நடிக்கவுள்ளனர். படம் ஏப்ரல் மாதம் தொடக்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குள் வாடிவாசல் ப்ரீ ப்ரொடக்ஷன் முடிவடைந்துவிடும் என்பதால் ஜுலை மாதம் முதல் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை துவக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷுட் நேற்று சென்னை ஈசிஆரில் துவங்கியது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மாடுகளில் இருந்து 12 மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, வாடிவாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட உள்ளது.
இதற்காக வாடிவாசல் போன்று செட் அமைக்கப்பட்டு, அதில் காளைகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க உள்ளார்கள். டெஸ்ட் ஷுட்டிங்கான போட்டோக்கள் நேற்று வெளியான நிலையில் இன்று மற்றொரு செட் போட்டோக்களை நடிகர் சூரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் களத்தில் மாடுபிடி வீரர்களுடன் நின்று சூர்யா மாடு பிடிக்கும் போட்டோவும் உள்ளது. பிறகு மாடுபிடி வீரர்களுடன் சூர்யா, சூரி ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ள சூரி ‘அண்ணன் வெற்றிமாறன் – அண்ணன் சூர்யா மிரட்டும் வாடிவாசல் ன் டெஸ்ட் ஷுட். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.