விஜய், பூஜா ஹெட்ஜ் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் படம் பீஸ்ட். இப்படத்தில் பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். ஆரம்பகாலத்தில் சினிமாவில் அவர் எதிர்கொண்ட கஷ்டங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்கத்தின் மூலம் யாரும் நிரப்ப முடியாத ஒரு இடத்தை தனக்கென்று வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவரது வித்தியாசமான கதைக்களமும், வசனமும் தமிழ் சினிமாவில் துண்டாக தெரியும் சிறப்புமிக்கது. இவரது தனித்துவமான படத்துக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவரது படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதோடு, மக்கள் தங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அமையும். வெளிவந்தபோது கொண்டாட தவறிய இவரது புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களை இப்போது மக்கள் கொண்டாடிதீர்க்கின்றனர். செல்வராகவன் மீதுள்ள மரியாதையின் காரணமாக அவரை ‘செல்வா சார்’ என அழைப்பது இப்போது ட்ரெண்டாக உள்ளது.
ஆரம்ப காலம்
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த வைஜெயந்தி மாலா தனது மகனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்ய விரும்பினார். இதற்காக நல்ல கதையை எதிர்பார்த்து இருந்தார். அப்போது வைஜெயந்தி மாலாவின் வீட்டிற்கு செல்வராகவன் கதை சொல்வதற்காக சென்றுள்ளார். ஆனால், வைஜெயந்தி மாலா கதையைக் கேட்காமல் அவரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளார்.
பிறகு, தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். அது பெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு, தனுஷ் மற்றும் செல்வராகவனை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்தியது. செல்வராகவனின் அடுத்தடுத்து படங்களான 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற தனித்துவமான படங்கள் செல்வராகவன் அவர்களை தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக மாற்றியது.
செல்வராகவன் ஒருபக்கம் பெரிய இயக்குனராக உருவெடுக்க, தனுஷ் தனது நடிப்பின் மூலம் நட்சத்திர கதாநாயகனாக வலம்வருகிறார். இப்போது பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்து வருவது அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மீது ஆர்வத்தை தூண்டியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.